Smile Please


Smile Please......


ஒரு தலைப்பாக எழுதப்படும் அளவுக்கு பெரிய விடயமா என்று சில நேரம் நீங்கள் சிந்திக்கலாம். அரிதாகக்  கிடைக்கும் அவசியமான விடயங்கள் எழுதப்படும் பேசப்படும் அளவிற்குத் தகுதியானது தான். முன்பெல்லாம் புன்னகை எல்லா இடங்களிலும் எல்லா நபர்களிடமும் இருந்து கிடைக்கப்பெறும் இலவசப் பொருளே. ஆனால் இன்று "கொஞ்சம் சிரிங்களன் " (smile Please ) என்று கேட்டு வாங்கும் பொருளாக மாறிப் போய்விட்டது.

அதுவும் இன்று நாகரீகம் நவீனம் என்று பேசுகிறார்களே அங்கே புன்னகை மறைக்கப்பட்டுவிட்டது. இருக்கமான ஆடைகளுக்குள் ஓர் இறுக்கமான உள்ளத்தை மறைப்பதைத்தான் இன்று fashion என்கிறார்கள்.

கிராமத்திலிருந்து உயர் படிப்பிற்காக தலை நகருக்கு வந்தபோது நான் கண்டு வியந்த இரண்டு விடயங்கள் உள்ளன.
1.வானளாவ உயரும் கட்டிடங்கள் அவற்றைக் கண்டவுடன் எதற்காக இந்த அதிகப் பிரயத்தன முயற்சி என எண்ணிக்கொண்டேன்.
2.புன்னகையை தொலைத்த மனிதர்கள். எதற்காக உதடுகளில் கூட இவ்வளவு இருக்கம் என்று எண்ணிக்கொண்டேன்.

யாரென்ற முகவரியே அறியாமல் கள்ளங்கபடமற்று கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் புன்னகைக்கும் பூ முகங்களை கிராமத்திலேயே நான் தொலைத்து விட்டேனோ என்று மனம் வினவியது. பொதுவாக கிராமங்களில் எதற்கென்று இல்லாமலே ஒருவரைக் கண்டவுடன் புன்னகைப்பார்கள். அவர்களுடைய புன்னகைக்குப் பின்னால் வஞ்சகம் இருக்காது. அதற்கான பிரதிபலனாக மறு புன்னகையைத் தவிர வேறெதையும் அவர்கள் எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.

சிலருக்குப் புன்னகைதான் முகமாக அமைந்துவிடும். இயல்பிலேயே மலர்ந்த முகம் தான் அவர்களுடையது.  அவ்வாறானவர்களுக்கு ஒரு நாளேனும் உதடுகளைச் சுருட்டிக் கொண்டிருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். சிலர் இதற்கு மாற்றம். அவர்களுக்குப் புன்னகைத்துப் பழக்கம் இல்லை பாவம்.....

அடிக்கடி நண்பிகளிடம் கூறுவேன் கொழும்பிலுள்ள பாதிப்பேருக்கு புன்னகைப்பதற்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று. முன்பொரு காலம் இலங்கை இராணுவத்தினருக்குப் புன்னகைக்கக் கற்றுக் கொடுப்பதற்காக அமெரிக்காவில் இருந்து இராணுவம் வரவழைக்கப்பட்டது என்று புத்தகத்தில் படித்தேன் . இன்றும் கூட ஆச்சரியமாக உள்ளது. புன்னகை அவ்வளவு முக்கியமானதா  என்றும் இயல்பான புன்னகையைக் கூட நமக்கு அந்நிய நாட்டவன் தான் கற்றுத் தர வேண்டுமா என்றும்.....

புன்னகை புத்துணர்விக்கானதோர் அருமருந்து . அதனால் தான் பலரும் வரவேற்கும் சந்தர்ப்பங்களில் முதலில் புன்னகையைப் பரிசாக வழங்குகிறார்கள். அதுமட்டுமல்ல புன்னகைப்பதால் எமது உடலும் உள்ளமும் புத்துணர்வு பெற்று வலிமையடைகின்றன. தசைகளை சுருங்கி விரியச் செய்து இரத்த ஓட்டத்தையும் அது சீராக்கி விடுகின்றது. ஒருவர் புன்னகைக்கும் போது செரோடோனின் எண்டோர்பின் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் சுரப்பிகள் இயற்கையாகவே சுரந்துவிடுகின்றன. அதுமட்டுமல்ல அதிகம் புன்னகையைப்பவர்கள் ஏனையோர்களை  விட ஏழு ஆண்டுகள் அதிகம் இளமையுடன் இருப்பார்கள் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த உண்மையைச் சற்று முற்கூட்டியே உரக்கச் சொல்லியிருந்தால் பலரும் புன்னகையுடனேயே உலாவியிருப்பார்கள் போல.

இரத்த அழுத்தம், இரைப்பைப் புண் போன்றவற்றுக்கான நிவாரணத்தை வழங்குவதுடன் மூளை நரம்புகள் விரைவாகச் செயற்படவும் புன்னகை வழிவகுக்கிறது.
இதனால்தான் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில்  புன்னகைக்குப் பாரிய பங்களிப்புள்ளது என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு அருமையான அதிசயமான மருந்து ஓரிரு நொடிகளில் சுயமாக உற்பத்தி செய்யக்கூடிய வகையில் எல்லோரிடமும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. ஆனால் நம்மில் பலரும் அதனைத் தொலைத்துவிட்டிருக்கிறோம். இலகுவாக இலவசமாகக் கிடைக்கும் பொருட்களில் நமக்கு  எப்போதும் அக்கறை குறைவு தானே.

எது எப்படியோ தலைப்பிட்டு எழுத வேண்டியளவிற்கு அரிதாகிப் போகும் விடயமாயிற்று இந்தப் புன்னகையும். என்னுடைய ஆசையெல்லாம்  இந்தப் பூவுலகம் புன்னகையால் நிரம்பியிருக்க வேண்டும் என்பதுதான்.

இனம் தெரியாத இரு முகங்களை இணைக்க இயல்பாகப் புணரும் புன்னகைக்கே முதற் பங்களிப்புண்டு. அறியாதவர்களைப் பார்த்துப் புன்னகைத்த மறுகணமே அறிமுகத்துக்கான  அத்திவாரம் இடப்படுகின்றது. எங்கே போகிறீர்? எங்கிருந்து வருகிறீர் ?யாருடைய மகள் ? என்று அந்த அறிமுகம் வார்த்தைகளில் ஆரம்பமாகும்.

அதுபோன்றே சில நாட்களோ பல நாட்களோ முரண்பட்டுப் பேசாமலிருந்த உறவுகளைப் பார்த்து நீண்ட நாளைக்குப் பின்னர் புன்னகைக்கும் போது பிரதிபலிப்பாக இன்னொரு புன்னகையைப்  பெறும் தருணம் உறவுகளுக்கிடையிலான இணைப்பைப் பலப்படுத்தும் அழகிய வாய்ப்பாகின்றது.

ஒரு சகோதரன் தன் மற்ற சகோதரனைப் பார்த்துப் புன்னகைப்பதும் சதக்கா என்றார்கள் நபியவர்கள். ஸதகா என்ற சொல் பல அர்த்தங்களைப் பொதிந்தது. மனதாரப் பிறருக்குக் கொடுக்கும் அன்பளிப்பு , கஷ்டத்தில் இருக்கும்போது செய்யப்படும் உதவி, ஒருவருக்கு நாம் கொடுக்கும் ஆறுதல், பிரதிபலனற்ற பரிசு ,நமக்கு நாமே செய்து கொள்ளும் நல்லுபகாரம், என்பது அவற்றில் சில. ஆம் . உண்மையில் புன்னகை இவ்வாறானது தான். புன்னகை நம்மில் ஏற்படுத்தும் நல்ல விளைவுகள் போன்றே மற்றவர்களிடத்திலும் சமூகத்தின் மத்தியிலும் மாற்றங்களையும் புத்துணர்வுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. எப்போதும் புன்னகையுடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ,புன்னகை பூக்கும் நண்பர்கள் ,ஆசான்கள், மூத்தோர்கள் எனப் புன்னகைக்கும் உறவுகளைச் சூழப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் தான்.

புன்னகையும் அனுதாபப் புன்னகை, தன்னம்பிக்கை புன்னகை ,நட்புப் புன்னகை ,வரவேற்புப் புன்னகை  எனப் பலவகையாக இருக்கின்றது. இவற்றில் எந்த வகையிலேனும் புன்னகையுங்கள் என்று கூறமாட்டேன் . எல்லாவகையிலும் புன்னகையுங்கள் என்றே கூறுவேன். ஏனெனில் உயிர் வாழ்வதற்கு எவ்வகையிலேனும் எப்போதும் சுவாசிக்க வேண்டுமல்லவா? அதுபோல உள்ளம் வாழ எல்லா வகையிலும் எல்லா நேரங்களிலும் புன்னகைக்க வேண்டும்.

புன்னகையுங்கள்...புரியாத பல புதிர்களுக்கு அது பதில்களைத்  தேடித் தரும்..

✍✍✍....
rasmiya niyas.

No comments:

Powered by Blogger.