முதுமையின் முனங்கல்கள்

முதுமையின் முனங்கல்கள்

குழந்தைப் பருவம் ,சிறுவர் பராயம்,  இளமை , வாலிபம்    என மனித வாழ்வில் அனைவரும் கடந்து வருகின்ற பருவங்கள் காணப்படுகின்றன. குழந்தை பருவம் என்பது பெரும்பாலும் மறக்கப்பட்ட ஒன்றாகவே எல்லோருக்கும் காணப்படுகின்றது . அங்கே நினைவுகள் ,ஞாபகங்கள் அச்சொட்டாக யாருக்கும் தேங்கி இருக்காது . பாட்டன் ,பாட்டி ,தாய் , தந்தை ,மூத்த சகோதரன் , சகோதரி என சொந்தங்கள் எம்முடைய குழந்தை பருவம் பற்றிய சில சுவையான சம்பவங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து சிரித்த பொழுது தான் அதில் இருக்கும் .

அவற்றை வைத்து குழந்தைப் பருவம்  இவ்வாறு தான் இருந்தது என்ற கற்பனையின் அடியாகப் பிறந்த நினைவுகள்தான் மனதில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் . சிறுவர் பராயம்  தான் நம்மில்  அனேக மானவர்களுக்கும்  விருப்பமானதாக இருக்கின்றது.  விளையாட்டுக்கள் , கேலிக்கைகள், அரட்டைகள்  என வாழ்வின் மகிழ்ச்சிகரமான பக்கங்கள் அதிகம் பதியப்பட்ட பக்கமாகவே  சிறுவர் பராயம் இருக்கும் . இளமை , வாலிபம் பற்றிக்  கூற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் . இளமையாகவே இருந்து விட வேண்டும் என்பது தான் பலருடையதும்  விருப்பமாக இருக்கின்றது.

கசப்பான உண்மை என்னவென்றால் இந்த உலகில் யாருமே விரும்பாத பருவம் எல்லோரும் ஒதுக்க நினைக்கின்ற பருவம் முதுமை தான் . அடைந்து விடக் கூடாது என்று பலரும் பிரார்த்திக்கின்ற பருவம்தான் முதுமை . அதனாலோ என்னவோ முதுமையை அடைந்தவர்கள் பலரும் தாங்கள் ஒதுக்கப்படுகின்றோம், புறக்கணிக்கப்படுகின்றோம் என்று அடிக்கடி கூறிக் கொள்கிறார்கள். 

சிலர் முதுமையை  அடைந்தாலும் கூட அவர்களுடைய துணிச்சலில் , சிந்தனையில் , பழக்கவழக்கங்களில் கூனல்கள் விழுந்து விடுவதில்லை.  எப்போதும் எல்லாவற்றையும் நேர்மையை சிந்தனையுடன் நோக்கி புது தெம்புடன் வாழ்வின் இறுதிப் பகுதியின்  ஒவ்வொரு நிமிடங்களையும் பெருமதியாகக்  கழித்துக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் வாழ்வில் உழைத்துக்களைத்ததில் ஓய்வாக முதுமையை கழித்துக் கொண்டிருப்பார்கள் . குழந்தைகளூடே  கிடைத்த உறவுகளுடன் அவர்கள் இணைந்து வாழ்வார்கள்.  வாழ்வில் சந்தோஷமான நிம்மதியான தருணமாக முதுமையை  அவர்கள் உணர்வார்கள்.

இன்னும் சிலர் முதுமை வரை உழைத்ததையெல்லாம்   குழந்தைகளுக்காக அர்ப்பணித்து விட்டு முதுமையிலும்  தம் வயிற்றுப பசிக்காக  ஓயாது உழைத்துக் கொண்டிருப்பவர்கள்.  தள்ளாடும் வயதிலும் சுமைகளோடு பயணிப்பவர்கள் . ஓய்வை வேண்டி நிற்பவர்கள் . இவ்வாறானவர்களுடன்   கொஞ்சம்  நேரம் ஒதுக்கிப்  பேசிப்பாருங்கள்.  வாழ்வை  அவர்கள்  எவ்வளவு  நொந்து  கொண்டிருக்கிறார்கள்  என்பது  விளங்கும் . 

ஒரு வயதான மூதாட்டி நிறைய வியாபார பொருட்களை தலையிலும் இடுப்பிலும் கையிலும் சுமந்துகொண்டு தள்ளாடியவாறு நடந்து சென்றுகொண்டிருந்தார் . கொஞ்சம் புன்னகையுடன் பேச்சுக் கொடுத்த போது   கேட்காமலேயே  அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார் . " ஏனும்மா  வயதாகியும் கஷ்டப்படுறீங்க பிள்ளைகள் யாரும்  இல்லையா "  என்று வினவியபோது ஓர்  அழுத்தமான பெருமூச்சுடன்   " இருக்காங்க அவங்களால முடியுமானத   செய்றாங்க . யாரையும் குறை சொல்லக்கூடாது ".  என்ற அந்தத் தாயின் வார்த்தைகள் ஆயிரம் பாடங்களை சொல்கின்றன . தள்ளாடும் வயதிலும் பல சுமைகளை வெளியிலும்  உள்ளுக்குள்ளும் சுமந்து கொண்டும் எவ்வளவு பக்குவமாக தூய்மையாக  பெற்ற பிள்ளைகளை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாரே என்று ஆச்சரியமாய் இருந்தது .

" இப்பெல்லாம் யாரும் எங்க கிட்ட பேசுற இல்ல "
 "எங்கட அனுபவங்களை சொன்னாலும்  கேட்கிறது இல்ல "
"யாருக்குமே  எங்கள  கணக்கும் இல்லை"
 " பழுத்தோலையாச்சே  எப்ப விழும் என்டு  தான் எல்லோரும்  பார்ப்பார்கள்."
 " புள்ளங்க  பார்ப்பாங்க என்டு  வளர்த்தோம் . இப்ப யாரோ  மாதிரி இருக்கிறாங்க ."
"  வேணாம். யாரும்  வேணாம்.  ஒதுங்கியே வாழ்வோம்." 
"  இந்தக் கட்டை சாயும் வரை கஷ்டப்பட வேண்டியதுதான் ." 

இவ்வாறு பல போதும்  பல முதியவர்களினதும்  முனங்கல்களை கேட்டிருப்பீர்கள்.  இவற்றை அன்றாடம் கேட்டுக் கொண்டே சலித்தவர்களும் எம்மில்  இருப்பார்கள் .  இந்த வார்த்தைகளை எல்லாம் தவறியும் கூட  கேட்டு விடக்கூடாது என்பதற்காக பெற்றோரை திருப்திப்படுத்தவே உழைப்பவர்களும் எம்மில்  இருப்பார்கள்.  இந்த இரு சாராரில்  இறை  திருப்பதி யாருக்குக்  கிட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 ஒரு முதியவரின் முகத்தை உற்று நோக்கிப் பார்க்கும் போது அவருடைய முகத்தில் பல கோடுகள் , சுருக்கங்கள் தோன்றி இருக்கின்றன . கண்கள் களைப்படைந்து போல் தோற்றமளிக்கின்றன . அவர்களுடைய அனுபவக் கீறல்களும்  எல்லையற்ற அர்ப்பணிப்புகளும் தான் அதற்கு காரணமாக இருக்க முடியும் . 

எவ்வாறு ஒரு புதிய குழந்தையின் வரவு  குடும்பத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியை தோற்றுவிக்கின்றதோ  அவ்வாறே ஒரு முதியவரின் இழப்பும்  குடும்பத்தின்  தூண்களை  சற்று ஆட்டம் காணச் செய்து விடுகின்றது . 

எனவே விரும்பாவிட்டாலும்  ஏற்காவிட்டாலும் நிச்சயம் குருத்தோலைகள் ஒரு நாள் பழுத்துத் தான்  ஆகவேண்டும் .  முதியவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.  அவர்கள் சொல்வதை சற்று நேரம் காது தாழ்த்திக் கேட்பது தான் அவர்களுக்கு மாபெரும் சந்தோஷம் . ஆறுதலான வார்த்தைகளால் அவர்களை  அரவணையுங்கள் . உங்கள் புன்னகையால் அவர்களுக்குப்  புத்துணர்வளியுங்கள் . இறை திருப்தி உங்களைத்  தேடிவரும் . ஏனெனில் சர்வதேச தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  முதியவர்களை  கண்ணியப்படுத்தாதவர்கள்  என்னைச்    சார்ந்தவரல்ல என்றே   கூறிவிட்டார்கள்.

1 comment:

Powered by Blogger.