மௌன மொழிகள்
மௌன மொழிகள்
ஒரு கன்னியின் மௌனம்
ஒரு கன்னியின் மௌனம் அழகானது ஆழமானது . அழகான வெட்க உணர்வுகளும் அன்பின் அரும்புகளும் அதற்குள் ஒன்றித்திருக்கும் . அவளின் கண்ணிமைகளுக்குள் மறைந்திருக்கும் கனவுகளும் அங்கே மெளன மொழிகளுக்குள் மெல்லப் பதிந்திருக்கும். அது யாரிடத்திலும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத ஆன்மாக்களின் மொழிகளுக்குள்ளால் வளர்ந்திருக்கும். தீர்க்கப்படாத , மொழிபெயர்க்கப்பட முடியாத மௌனமாகவே அது இருக்கும்.
ஒரு முதியவரின் மௌனம்
பல கட்டங்களைக் கடந்து அனுபவங்களில் உயர் பதவி பெற்ற வயதில் ஒரு முதியவரின் மௌனம் ஆயிரம் வார்த்தைகளைச் சுமந்து நிற்கும் . தன் நீண்ட மௌனங்களைக் கலைக்க யாராவது வந்து பேச மாட்டார்களா என்ற ஏக்கம் அந்த முதியவரை சுற்றியிருக்கும் அவரது உடல் தோற்றத்தில் அங்க அசைவுகளில் அது வெளிப்படும் .
ஒரு குழந்தையின் மௌனம்
துள்ளித் திரிய வேண்டிய வயதில் குதூகலிக்க வேண்டிய இடத்தில் ஒரு குழந்தை மெளனித்தே இருக்கின்றது என்றால் அது மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம் . அன்பு , அரவணைப்பில் ஏதோவொரு இடத்தில் அது தவற விடப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம் . அக்குழந்தை , தாயின் அன்பில் தந்தையின் அரவணைப்பில் பூரணத்துவத்தை வேண்டி நிற்கின்றது. ஏனென்றால் தந்தையின் அரவணைப்பு சரியாக கிடைக்கப்பெற்ற குழந்தை தைரியமாகவும் தாயின் அன்பு சரியாகக் கிடைக்கப்பெற்ற குழந்தை கலகலப்பாக மகிழ்வாகவும் இருக்கும் .
உயிர் தோழனின் மௌனம்
எப்போதும் உங்களை சந்தோஷப்படுத்துகின்ற ஏதாவது சொல்லிக் கொண்டு பேசிக் கொண்டே இருக்கின்ற உங்கள் தோழன் அல்லது தோழி மௌனமாக இருந்தால் உங்கள் ஆதரவை அவர் எதிர்பார்த்து இருக்கின்றார் என்று அர்த்தம் . சந்தோசப்படுத்தவோ மெளனம் கலைத்துப் பேசிக் கொண்டிருக்கவோ அன்றைய நாளில் உங்கள் பேச்சுக்களையே அந்த மெளனம் வேண்டி நிற்கின்றது .

No comments: