வாழ்க்கை அது அப்படியானது தான்

வாழ்க்கை அது அப்படியானது தான் 

இப்படித் தான் வாழ வேண்டும்  என்று திட்டமிட்டிருப்போம் . அதற்கெனவே  முழு மூச்சாக உழைத்திருப்போம் . ஆனால் அப்படியல்ல நீ இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கை எம்மைப்  புரட்டிப்   போட்டிருக்கும் .
அதற்காக உடைந்து போகத்  தேவையில்லை .ஏனனெனில் வாழ்க்கை அது அப்படியானது தான் .

சில நேரம் சிரிக்க வைக்கும். சில நேரம் ஆழவைக்கும் . சில நேரம் இன்னும் வாழ வேண்டும் என்ற வேட்கையை விதைத்துச் செல்லும் . சில நேரம் விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு மரணத்தை எதிர்பார்த்து நிற்கும் .

சில தருணங்களில் கடந்த காலத்தை மீட்டிப் பார்க்கும் போது புன்னகைகள் புரியாமலே புலர்ந்து விடும்.  கடந்த கால இன்பங்களை , ரசனைகளை , அலாதியான அனுபவங்களை எல்லாம் அவை அழகாக மீட்டித் தரும் .
குழந்தைப் பருவம் , பள்ளிப் பருவம் , கல்லூரி நாட்கள் , விடுதியில் கழித்த பொழுதுகள் , உயிருக்குயிரான நண்பர்கள் , ஆசான்கள், அவர்களுடனன அழகிய  நொடிகள் , குழுப்பயணங்கள் , சுற்றுலாக்கள் , தலைமை வகித்த நாட்கள் , விளையாட்டுப் போட்டிகள்...........
என வாழ்வில் அனைவருமே ரசித்த சில பொதுவான பொழுதுகள் அனைவருக்கும் இருக்கத்   தான்  செய்கின்றன . 


                           source: https://cdn.pixabay.com

 மறு பக்கத்தில் சிலவேளைகளில்  கடந்து போன சில நிகழ்வுகளை சற்றுத் திரும்பிப் பார்த்தால் அங்கு கணப்பொழுதில் கண்ணீர் கனதியாகி விடும் . புரியாமல் புலர்ந்த புன்னகையை விட  கணப்பொழுதில் கனதியாகிய கண்ணீருக்கு சற்று வலிமை அதிகம் தான் .

சில கவலைகள் கடந்து சென்றிருந்தாலும் கலைந்து செல்வதில்லை .
மனதின் ஏதோ ஒரு மூலையில் அவை கட்டிப் போடப்பட்டிருக்கும் .
அவற்றையெல்லாம் தவறியும் கூட நினைவுபடுத்திக் கொள்ள மனது விரும்புவதில்லை.

ஒவ்வொருவர்க்கும்    மறக்க முடியாத , சொல்ல முடியாத, நினைத்தும் பார்க்க முடியாத பக்கங்கள் இருக்க்கத் தான் செய்கின்றன . மூடப்பட்ட ஜன்னல்கள் அங்கு நிறையவே இருக்கின்றன .அங்கே மூடுண்டு கிடக்கின்ற எல்லாக் கவலைகளையும்  சொல்லி அழ வேண்டும் .கண்ணீரிலே கரைத்து விட வேண்டும் . அதனை மறுப்புக்கள் இன்றி மெளனமாக கேட்டுக் கொண்டிருக்க ஒரு சொந்தம் வேண்டும் என்பதே எல்லோருடையதும் ஆசுவாசமாக இருக்கின்றது . ஆனாலும் எல்லோர்க்கும் அதற்கான வாய்ப்புக்களும் உன்னதமான உறவுகளும் வாய்த்து விடுவதில்லை .  ஏனனெனில் வாழ்க்கை அது அப்படியானது தான் . 
source:https://cdn.pixabay.com
                                              
"கவலைப்படாதே " ("லா தஹ்சன் " ) என்ற   அரபு மொழி நூலில்  கலாநிதி ஆயிழ் கர்னியின் , "வாழ்க்கை ஒரு எலுமிச்சம்  பழம் போன்றது .அதன் சாற்றுடன் உப்பும் இனிப்பும் கலக்கப்படும் போது தான்  அது சுவையான பானமாக மாறுகின்றது . வாழ்க்கையும் அப்படித்தான் இன்பம் துன்பம் என்ற இரண்டும் கலந்து வரும் போது தான் வாழ்வின் சுவாரஷ்யம் எமக்குப் புரியும்."  என்ற வரிகள்   வாழ்வின் யதார்த்தத்தை பறை சாற்றி நிற்கின்றன .ஏனனெனில் வாழ்க்கை அது அப்படியானது தான் . அது எல்லார்க்கும் எலுமிச்சம் சாறு போன்றது தான் . அதை சுவையானதாக மாற்றுவது அவரவரது  கைகளில் தான்  இருக்கின்றது.
வாழ்க்கையை முன்னோர் வழக்கம் போல் வாழ்பவர்கள் சிலர்.
பிறந்தோம் வாழ்கிறோம் என்பதற்காக   வாழ்பவர்கள் சிலர்.
வாழ்க்கையை தாங்க முடியாத தடையாக நினைத்து தினம் தினம் நிராசையில் மிதப்பவர்கள் பலர். வலிகள் தான் வாழ்க்கையென்றான போதும்  விழிகளோடு அவற்றை மறைத்து விட்டு சவால்களை எதிர்கொண்டு துணிந்து நிற்பவர்கள் சிலர்.
இவ்வாறானவர்கள் தான்  வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறார்கள்.
வெற்றி பெறுகிறார்கள் .அவர்களுள் ஒருவராக நீயும் இருந்து விடு .கருவறையில் உதித்த ஒவ்வொன்றும் மண்ணறையை தரிசித்து தான் ஆக வேண்டும் . வாழ்க்கையை வளப்படுத்தினாலும் வளப்படுத்தாவிட்டாலும்
மண்ணுக்கு வளமாக்கியாக மானிடன் சேர்வான் அவனது வாழ்க்கையின் முடிவுரையில் .. என்பதை உணர்ந்துகொள் .

எனவே வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள் .எல்லோருக்கும் எல்லா நேரத்திலும்  எல்லாமும் சரியாக அமைந்து விடாது .எல்லாவற்றிற்கும் ஏதோவொன்று முடிவாக எங்கேயோ ஒழிந்திருக்கும் என்ற எண்ணத்துடன் எட்டி நடை போடுவோம் வா...
எமக்கென்று எழுதப்பட்டவை விதியாகும் .
நமக்கென்று நாம் முயற்சித்தவை யாவும் நலவாகவே நாளைய நாட்களில்
நடைமுறையாகும்.
வாழ்வின் வரம்புகளுக்குள்ளால் நாம் வளைந்து செல்ல வேண்டுமே தவிர வலிந்து உடைந்து விடக்கூடாது .

இவள் 
நலவின் மகள் .......
Rasmiya Binth Niyas
                                                                                                                                                                                                                                                  

1 comment:

Powered by Blogger.