உனக்காகச் சொல்கிறேன்

உனக்காகச் சொல்கிறேன் 

வாழ்க்கை அதை சரியாக வாழப் பழகிக்கொள். இல்லையேல் அது உன்னை வாட்டி வதைத்து விடும். ஏனெனனில் பழக்கங்கள் தான் வாழ்நாளின் வழக்கங்களாக உருவாகின்றன .
வாழ்க்கையை வெளியிலிருந்து பார்த்தால் வானம் போலத்தான் தெரியும் .அதன் முடிவிடம் எங்குள்ளது என்பது எம் அறிவிற்கு அப்பாலே மறைந்திருக்கும் . ஆனால் அதற்குரிய வழிமுறைகளில் இலேசாக வாழ்ந்து பார்த்தால் அது சிறிய அத்தியாயம் எனப் புரியும்.

வாழ்க்கை நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கம் வாசிக்கப்படுகிறது . இன்றைய பக்கங்களை நன்றாக வாசித்தால் தான்
நாளை நமக்கென்று பல புதிய பக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் .
நமக்கென்று எழுதப்பட்டவை நாளை நடைமுறையாகும் என்ற நம்பிக்கையுடன் நடைபோடலாம்.

Empty Wooden Bench 
source : Markus Spiske temporausch.com


வாழ்க்கையை முன்னோர் வழக்கம் போல் வாழ்பவர்கள் சிலர்.
பிறந்தோம் வாழ்கிறோம் என்பதற்காக   வாழ்பவர்கள் சிலர்.
வாழ்க்கையை தாங்க முடியாத தடையாக நினைத்து தினம் தினம் நிராசையில் மிதப்பவர்கள் பலர். வலிகள் தான் வாழ்க்கையென்றான போதும்  விழிகளோடு அவற்றை மறைத்து விட்டு சவால்களை எதிர்கொண்டு துணிந்து நிற்பவர்கள் சிலர்.
இவ்வாறானவர்கள் தான்  வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறார்கள்.
வெற்றி பெறுகிறார்கள் .அவர்களுள் ஒருவராக நீயும் இருந்து விடு .


கருவறையில் உதித்த ஒவ்வொன்றும் மண்ணறையை தரிசித்து தான் ஆக வேண்டும் . வாழ்க்கையை வளப்படுத்தினாலும் வளப்படுத்தாவிட்டாலும்
மண்ணுக்கு வளமாக்கியாக மானிடன் சேர்வான் அவனது வாழ்க்கையின் முடிவுரையில் ... என்பதை உணர்ந்துகொள் .

வாழ்க்கை நாடகத்தில் சுமை தாங்கி என்ற கதாப்பாத்திரமே அலாதியானது .
சுமை இல்லாத வாழ்க்கையில் சுவை கிடையாது . சுமைகளை ஏற்றுமதி இறக்குமதி செய்கையில் தான் சொந்தங்களின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது .எண்ணற்ற வலிகளைத் தந்த உறவுகளும் மனதிற்கு சுகமளித்த உறவுகளும் வாழ்க்கை வாழும் வரை தான் .

வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ முகங்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது .என்றாலும் அத்தனை முகங்களையும் மனம் பதித்துக்கொள்வதில்லை . பழகுகின்ற எல்லா இதயங்களையும் மனம் ஏற்றுக்கொள்வதுமில்லை .


என்றாலும் சில இதயங்களின் சுவாச ஒலிகளைக் கூட இதமாகக் கேட்டு ரசிக்க முடிகிறது . ஏனோ சிலரின் நினைவுகளை உள்ளம் என்றும் மறப்பதற்குத் தயாரில்லை. அன்பானவர் , உன்னதமானவர் , விருப்பமானவர் , வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் எனப்  பல வகையான விருதுகளுக்குப் பலரையும் மனம் ஒதுக்கித்த தான் வைத்துள்ளது .

காலங்கள்  கடந்தாலும் வாழ்க்கைக் கட்டங்கள் தான் மாறினாலும் அவ்வாறானவர்களை மனம் மறப்பதற்கில்லை . அவ்வாறானவர்களின் நினைவுகள் விரல்களோடு ஒட்டி வரையப்பட்டிருக்கும் ரேகைகள் போல எப்போதும் கூடவே வந்து நிற்கும் .அவ்வாறானவர்களை இன்ப ,துன்பங்களின் போதும் வெற்றி ,தோல்விகளின் போதும் மனம் மறந்தும் மறந்து விடக்கூடாது என்பதை நினைவில்கொள் .


இங்கு நல்லவர்களை நேசிப்பது எல்லார்க்கும் இயலுமானது .ஆனால் எல்லோரையும்  நல்லவர்களாகப் பார்ப்பது எல்லோர்க்கும் இயலுமானதல்ல.
புனிதம் என்ற கண்ணைக் கொண்டு யாரையும் மதிப்பிட்டு விடாதே .மனிதம் என்ற கண்ணைக் கொண்டு பார் . அன்பு ,அரவணைப்பு ,பசி,தாகம் போல தவறு இழைப்பதும் மனித இயல்பு தானே .

Seaport during Daytime  
https://images.pexels.com

மனிதம் என்ற தன்மையால் எனக்கும் உறவாகிப்போன உனக்காகச் சொல்கிறேன் .இந்த உலகிலே இன்று சாதித்தவர்களெல்லாம் ஏதோ ஒரு வகையில் அடிபட்டவர்கள் ,வறுமையின் கோட்டைக்குள் அகப்பட்டவர்கள் ,பிறரால் பெறுமானமின்றி நோக்கப்பட்டவர்கள் , பல்வேறுபட்ட காயங்களால் நொந்து போனவர்கள் தான் .அவ்வாறானவர்களை நான் சொல்லித் தான் நீ அறிய வேண்டும் என்ற அவசியம் உனக்கில்லை .

தோமஸ் ஆல்வா எடிசன் ,"தோல்விகளைத் தோற்கடித்த ஒரு வெற்றி வீரன் "
தோல்விகள் விடாமல் துரத்திய போது அவர் துவண்டு போயிருந்தால் இன்னுமிந்த உலகம் இருட்டறைகளாகவே இருந்திருக்குமோ என்னவோ ......
அப்துல் கலாம் தன் குடிசைக்குள்ளும் குடும்பச் சுமைகளுக்குள்ளும் மாத்திரம் சுருங்கிப் போயிருந்தால் இன்று பலரின் வெற்றிக்கு வழிகாட்டுதல்கள் , உந்துதல்கள் கிடைத்திருக்காது . சோதனைகள் ஒன்றும் சாதனைகளுக்குத் தடையல்ல என்ற யதார்த்தத்தில் இவர்கள் உருவாகினார்கள் .

ஒவ்வொருவர்க்கும்    மறக்க முடியாத ,சொல்ல முடியாத, நினைத்தும் பார்க்க முடியாத பக்கங்கள் இருக்க்கத் தான் செய்கின்றன . மூடப்பட்ட ஜன்னல்கள் அங்கு நிறையவே இருக்கின்றன .அங்கே மூடுண்டு கிடக்கின்ற எல்லாக் கவலைகளையும்  சொல்லி அழ வேண்டும் .கண்ணீரிலே கரைத்து விட வேண்டும் . அதனை மறுப்புக்கள் இன்றி மெளனமாக கேட்டுக் கொண்டிருக்க ஒரு சொந்தம் வேண்டும் என்பதே எல்லோருடையதும் ஆசுவாசமாக இருக்கின்றது . ஆனாலும் எல்லோர்க்கும் அதற்கான வாய்ப்புக்களும் உன்னதமான உறவுகளும் வாய்த்து விடுவதில்லை .  ஏனனெனில் வாழ்க்கை அது அப்படியானது தான் . 

எனவே வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள் .எல்லோருக்கும் எல்லா நேரத்திலும்  எல்லாமும் சரியாக அமைந்து விடாது .எல்லாவற்றிற்கும் ஏதோவொன்று முடிவாக எங்கேயோ ஒழிந்திருக்கும் என்ற எண்ணத்துடன் எட்டி நடை போடுவோம் வா...
எமக்கென்று எழுதப்பட்டவை விதியாகும் .
நமக்கென்று நாம் முயற்சித்தவை யாவும் நலவாகவே நாளைய நாட்களில்
நடைமுறையாகும்.
வாழ்வின் வரம்புகளுக்குள்ளால் நாம் வளைந்து செல்ல வேண்டுமே தவிர வலிந்து உடைந்து விடக்கூடாது .





இப்படிக்கு
நலவின் மகள் .............

  

No comments:

Powered by Blogger.