சந்தோசமாக இருப்பதற்கான வழிமுறைகள்

சந்தோசமாக இருப்பதற்கான வழிமுறைகள் 
இந்த உலகில் பிறந்த, பிறக்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ஆசுவாசமாக இருப்பது சந்தோசம் , நிம்மதி என்பவை தான் . உண்மையில் சந்தோசமாக இருப்பவர் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பார் . சந்தோசம் என்பது இன்று பலராலும் தொலைக்கப்பட்ட பொருளாகவே காணப்படுகின்றது . அநேகமானவர்கள் அதனையே தேடி அலைகின்றனர் .  


சந்தோசமாக வாழ்வதற்கு  என்ன வழி முறைகள் 
1. எப்போதும் புன்னகையுடன் இருங்கள்

மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துகின்ற ஒரு பண்பு புன்னகை ஆகும். விலங்குகளால் புன்னகைக்க முடியாது . சிரிக்க முடியாது. மனிதர்களால் இயலும். சில மனிதர்கள் இயல்பாகவே புன்னகையுடன் காணப்படுவார்கள். அவர்களை  எல்லோரும் நல்லவர்கள் என்பார்கள். அன்பானவர் என ஆராதிக்கிறார்கள். ஒருவர் புன்னகைக்கும் போது உடல் உள ஆரோக்கியம் இரண்டும் ஒருசேர கிடைக்கின்றது . தசைகள் சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டம், தசைகளின் செயல்பாட்டிற்கு தூண்டுதலை அளிக்கின்றது ,உற்சாகப்படுத்துகிறது.
இதனால் மனதில் கவலைகள் மறந்து உற்சாகம் அடைகின்றது. இதனால்தான் இராணுவ வீரர்களுக்கு கூட புன்னகைக்க கற்றுக்கொடுக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு புன்னகைப்பதற்கு  கற்றுக்கொடுக்க அமெரிக்க ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர் என்ற விடயத்தை படித்தவுடன் ஆச்சரியப்பட்டேன். இயல்பாகக் கிடைக்கின்ற புன்னகைக்கு இவ்வளவு மதிப்பா என்று ............................. 


Image result for image of happy
freepik.com


2. எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில்  இடம்பெறும் எதிர்பாராத விஷயங்களை , நீங்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒருபோதும் தலையில் போட்டுக்கொண்டு சுற்றித் திரிய வேண்டாம். ஏனெனில் எந்த விடயத்தைப் பற்றியும் கவலைப் படுவதால் தூக்கி பிடிப்பதால் எந்த விடயமும் முடிந்துவிடப் போவதில்லை. எந்த பிரச்சினையும் தீர்ந்து விடப்போவதில்லை. எனவே காலத்தின் கைகளில் ஒப்படைத்து விடுங்கள் .என்றாலும்  அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.

3. எப்போதும் உங்கள் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள் .


ஏனெனில் மனது கடிவாளம் போன்றது அது நமது கைகளுக்குள் இருக்கும் வரை தான் எம்மால் வாழ முடியும் .
யாருடனும் உங்களை  ஒப்பிடாதீர்கள்.  மனதை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள்.  மனதிற்கு கட்டுப்பட்டு விடாதீர்கள் . ஏனெனில் அது உங்களை ஆட்டிப் படைக்கும். உங்களால் முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது பொருத்தமில்லாத சந்தர்ப்பங்களில் செயற்படுவது பற்றி மனதுக்கு சொல்லி வையுங்கள்.  உங்களுக்குத் தரப்பட்ட வற்றைக்கொண்டு  திருப்தி அடையுங்கள் .எப்போதும் உங்களுக்கு மேல் உள்ளவர்கலைப்  பார்க்க வேண்டாம் . உங்களுக்கு கீழே உள்ளவர்களை பார்த்து உங்கள் வாழ்க்கையில் திருப்தி அடைந்து கொள்ளுங்கள்

4. மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் .

எதிர்பார்ப்புகள் இன்றி எல்லாருக்கும்  உதவி செய்யுங்கள் .அது மன திருப்தியை உங்களுக்கு பெற்றுத்தரும் . எப்போதும் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தும்  போது உங்களை  சந்தோஷம்  தேடி வரும். நிகழ்வுகளாக இல்லாவிட்டாலும் மனதுக்குள் சந்தோஷம் குடி கொண்டிருப்பதை உணர்வீர்கள்.  நம்மால் மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற திருப்தி நம்மை சந்தோஷமாக வாழ வைக்கும். அவர்களுடைய பிராத்தனை எப்போதும்  வாழ்நாளை நீடிக்க வைக்கும்.

5. எல்லோருடனும் அன்பாக இருங்கள் .

அன்பு என்பது இந்த உலகை ஆளும் ஒரு சக்தி என்று குறிப்பிடலாம். வேறுபாடுகள் இல்லாமல் எல்லோருடனும் அன்பாக பழகுங்கள். அனைவரும்  உங்களை விரும்புவார்கள் .உறவினர்கள் நண்பர்கள் என்ற வட்டத்துக்குள் மாத்திரம் அன்பை சுருக்கி கொள்ளாது மனிதன் என்ற உயிரினங்கள் என்ற பெரும் வட்டத்துக்குள் உங்களுடைய அன்பை நீட்டித்துக்  கொள்ளுங்கள் . மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என்று எல்லா வகையான உயிரினங்களிடமும்  அன்பாக மென்மையாக பழக  பழகிக்கொள்ளுங்கள். அது எப்போதும்  மனசுக்கு நிலையான சந்தோசத்தை அளிக்கக்கூடியதாக இருக்கும். முதியவர்களுடன் அன்பாக பேசுங்கள். அவர்களுடைய அனுபவங்களை செவிதாழ்த்திக் கேளுங்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். சிரியவர்களுடன்  விளையாடுங்கள் . இளைஞர்களுடன் இன்பமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

6. நல்ல நண்பர்களை தெரிவு செய்து கொள்ளுங்கள். 

எல்லோருடனும்  நன்றாக பழக வேண்டும் . என்றாலும் நமக்கென்று சில பிரத்தியேகமான நட்புகளும் இருக்கவேண்டும். அப்போது தான் வாழ்க்கை  சுவாரசியமாக இருக்கும் . உங்களை புரிந்துகொள்ளக்கூடிய உங்கள் கவலைகளை இன்பங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய நல்ல நண்பர் கூட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் நீங்கள் ஒரு நல்ல நண்பராக மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் . அப்போதுதான் அது சாத்தியமானதாக காணப்படும். ஏனென்றால் நல்ல நண்பர்கள் பலநூறு நூல்களுக்கு சமமானவர்கள் எப்போதும் கூடவே இருப்பவர்கள்.

7. உறவுகளுடன் பேசுங்கள்.

 யாராக இருந்தாலும் சரி மனிதன் என்ற முறையில் எல்லோருமே உறவுகள்தான் எனவே அறிந்தவர்களிடம் பேசுவது என்று இல்லாமல் பயணத்தின் இடையில், நடைபாதையில் ,பொது இடங்களில் இருக்கும்போது உங்கள் அருகில் இருப்பவர்களுடன் உறவுகளாக நினைத்து பேசுங்கள் . அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களிடம் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள் .இதன் மூலமாக மனது ஒரு விதமான  மனிதாபிமான வடிவிலான சந்தோசத்தை அனுபவிக்கக்  கூடியதாக இருக்கும் . எங்கு சென்றாலும் உங்களுக்கு என்று சில உறவுகள் காத்திருக்கும்.

8 . நேர்மறையாக சிந்தியுங்கள்.

 சந்தோஷமான வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றே  நேர்மறையான சிந்தனை .வாழ்வில் எது நடந்தாலும் யார் என்ன துரோகம் செய்தாலும் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தாலும் எல்லாம் கடந்து போகும் எல்லாவற்றின்  முடிவிலும் ஒரு நலவு  உண்டு. வாழ்க்கை எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கிறது என்று நேர்மறையாக சிந்தியுங்கள். ஒரு போதும் எனக்கு தான் இவ்வாறு நடக்கிறது, எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று சிந்திக்காதீர்கள்.  நேர்மறை சிந்தனைகள் மூலம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இயல்பாகவே வளர்ந்து இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

9. மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுங்கள்.

 எப்போதும் பிறர் கவலையை போக்குவதில் ஒரு எல்லையற்ற சந்தோஷம் கிடைக்கின்றது .வீதியோரங்களில் பசியினால் வாடுபவர்கள் , உறவுகளை இழந்து தவிப்பவர்கள் ,அன்புக்காக ஏங்கி நிற்பவர்கள் ,வறுமையை போக்க படாதபாடு படுபவர்கள் என இந்த உலகில் அனேகமானவர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி  செய்ய வேண்டும் என நீங்கள் எண்ணினால் ஒரே நிமிடம் அவர்களோடு இருந்து பேசி ஆறுதல் கொடுங்கள் . அதைவிட மிகப்பெரிய பரிசு ,உதவி அவர்களுக்கு வேறு எதுவும் இருக்காது. ஒருவேளை அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம் என்றாலும் என்னால் யாராவது ஆறுதல் பெற வேண்டும் என்று ஆறுதல் கொடுக்கும்போது எமக்கான ஆறுதல்  எம்மிலேயே  கிடைத்துவிடும்.
Image result for image of happy
time.com

10. விரும்புபவர்களிடம் கவலையை சொல்லுங்கள். எல்லோருக்கும்  கவலைகள் இருக்கத்தான் செய்கின்றன .என்னதான் எல்லாருக்கும் ஆறுதல் சொன்னாலும் நமக்கென்று வரும் போது நாமும் மற்றவர்களிடம் கவலைகளை சொல்வதில் தவறேதும் இல்லை . எனவே உங்கள் கவலைகளை சொல்லி விடுங்கள் . உங்களை விரும்புவர்கள் உங்களை பற்றிய ரகசியங்களை பேணுபவர்களிடம்  கவலைகளைச் சொல்லுங்கள் . நீங்களும் அவர்களின் கவலைகளை செவிதாழ்த்திக் கேளுங்கள்.
நண்பர் ஒருவரின் மூலமாக பின்வரும் கவிதை எனக்கு கிடைக்கப் பெற்றது.
" உனக்கு அழத் தோன்றும் ஒருநாளில் எனக்கும் ஒரு அழைப்பு தா. சத்தியமாய் நான் உன்னை சிரிக்க பண்ணமாட்டேன் .

நிச்சயமாய் என்னாலும் சேர்ந்தழ முடியும்.
 உனக்கு தூரத்தே  எங்காவது ஓடி விடத் தோன்றும் ஒரு நாளிலும்  அச்சமின்றி எனக்கு ஒரு அழைப்பு தா.
 சத்தியமா நான் உன்னை நின்றுவிடக் கேட்க மாட்டேன்.
 நிச்சயமாய் என்னாலும் சேர்ந்தோடி  வர முடியும். 
உனக்கு அனைத்து குரல்களும் கசக்குமோர்  நாளிலும் 
எனக்கு ஒரு அழைப்பு தா.
 நான்  வந்து குரலெழுப்பி பேசமாட்டேன்.
 நிச்சயமாய் என்னாலும் நிசப்தமாய் இருக்க முடியும்.
 ஆனால் நீயாக அழைக்கும் ஓர் நாளில் என் பக்கம் நீண்ட நிசப்தம் இருந்தால்  வேகமாய் வந்து  என்னைப்பார் .
சேர்ந்தழவோ  நிசப்தமாய் அமர்ந்திருக்கவோ  அன்றைக்கு என் தேவை நீயாக  இருக்கலாம்.



11.  நல்ல புத்தகங்களை வாசியுங்கள்.
  நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்களை போன்றவை. மனதுக்கு இனிமை தரக்கூடியவை. தனிமையை போக்கக்கூடியவை . எனவே எப்போதும் புத்தகங்களை உங்களுடன் கூடவே வைத்திடுங்கள் .தொலைத்தொடர்பு சாதனங்கள் உடனான உறவை விட புத்தகங்கள் உடனான உறவு உண்மையில் சுவாரசியமானது இனிமையானது.

12. அர்த்தமுள்ள இனிமையான பாடல்களை கேளுங்கள்.

 எப்போதும் இனிமையான இசை என்பது மனதுக்கும் மூளைக்கும் சந்தோசத்தை கொடுக்கக்கூடியது .இசையில் மூழ்குவது என்பது சந்தோஷத்தை கெடுத்துவிடும் . இடைக்கிடையே மனதுக்கும் மூளைக்கும் ஓய்வு , இனிமை தேவைப்படும்போது இனிமையான இசையை கேட்டு அர்த்தமுள்ள பாடல்களை கேளுங்கள் .

13.  முடிந்தவரை சமூக சேவையில் ஈடுபடுங்கள்.

 எப்போதும் சுயநல சந்தோசத்தை விட பொதுநலன் , சமூகசேவை செய்கின்ற போது கிடைக்கின்ற இன்பங்கள் அலாதியானது, அற்புதமானது. எனவே எப்போதும் சமூக சிந்தனையுடன் பொதுநலத்துடன் அனைத்தையும் செய்யுங்கள் . அதற்காக பாடுபடுங்கள் . சந்தோஷம் உங்களைத் தேடி வரும்.

No comments:

Powered by Blogger.